தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..! - திருவாரூர் தொடர் கனமழை

TN Rains: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை
கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:21 AM IST

Updated : Jan 8, 2024, 11:25 AM IST

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜன.8) அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பதிவான அளவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், திருவாரூரில் 212 மி.மீ, நன்னிலம் பகுதியில் 164 மி.மீ, குடவாசல் பகுதியில் 134 மி.மீ, வலங்கைமான் பகுதியில் 107 மி.மீ, மன்னார்குடியில் 74 மி.மீ, நீடாமங்கலம் பகுதியில் 88 மி.மீ, பாண்டவையாறு பகுதியில் 103 மி.மீ, திருத்துறைப்பூண்டி பகுதியில் 23 மி.மீ மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் 4 மி.மீ மழையும் என மொத்தம் 911.9 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.

அதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று (ஜன.7) காலை 8.30 மணி முதல் இன்று (ஜன.8) காலை 6 மணி வரை சராசரியாக 121.42 மி.மீ பெய்துள்ளது. அந்தவகையில், மயிலாடுதுறையில் 97.80 மி.மீ., மணல்மேடு பகுதியில் 105 மி.மீ., சீர்காழியில் 220.80 மி.மீ., கொள்ளிடம் பகுதியில் 179.40 மி.மீ., தரங்கம்பாடி பகுதியில் 83.90 மி.மீ., செம்பனார்கோவில் 41.60 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இதனிடையே, கனமழை பெய்துவரும் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தவகையில், கனமழை காரணமாகவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும் இன்று (ஜன.08) கடலூர், விழுப்புரம் மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மீனவர்களுக்கு எச்சரிக்கை: கனமழை காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அக்கரைப்பேட்டை, கல்லாறு, செருதூர், பட்டினச்சேரி, நம்பியார் நகர் உள்ளிட்ட 25 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இதையும் படிங்க:திருவாரூரில் சுவர் இடிந்து விழுந்து 9 வயது சிறுமி உயிரிழந்த சோகம்

Last Updated : Jan 8, 2024, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details