சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டை, புரசைவாக்கம், பட்டாளம் மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வருடந்தோறும் கொண்டாடப்படுவதை போல ஹோலி பண்டிகை இன்று (மார்ச் 8) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், சென்னையில் உள்ள வடமாநிலத்தவர்கள் உள்பட பலரும் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகள் பூசி, உற்சாக நடனமாடியவாறு ஹோலி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். இந்த பண்டிகையானது வடமாநிலத்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்து மதத்தினரின் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான கோடை காலத்தை வரவேற்கும் நிகழ்வாக இந்த ஹோலி பண்டிகை அமைந்துள்ளது. இந்த பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜூ ஆகிய இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
புராணம் கூறும் ஹோலி வரலாறு: இந்தியாவில் பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, மணிப்பூர் மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது ‘வசந்த காலத் திருவிழா’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஹோலி பண்டிகை, குளிர் காலத்தின் இறுதியில், பங்குனி மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். இந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை எரிய வைப்பார்கள்.