சென்னை:ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”75 ஆண்டுகால சுதந்திரத்தையும், பெருமையையும் கொண்டாடும் இந்த ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வளமான இந்தியாவுக்காக நமது மகத்தான சுதந்திரப் போராளிகள் செய்த தன்னலமற்ற சேவைகள் மற்றும் உயர்ந்த தியாகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உன்னத தியாகங்களுக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும். நமது மூவர்ண தேசியக்கொடி நமது சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது. இது நமது சுதந்திர போராட்ட வீரர்களின் ரத்தத்தினாலும் தியாகத்தினாலும் பிறந்தது.
வீரம் மிக்க நமது முன்னோர்களான புலித்தேவன், வீரன் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வெண்ணிக்காளடி, ஒண்டிவீரன், முத்து குடும்பனார், சுந்தரலிங்கம், பெரிய காலடி, ஊமைத்துரை, கருப்ப சேர்வை மற்றும் ஆயிரக்கணக்கானோர் இக்கொடிக்காக உயிர் துறந்தனர்.
மேலும் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன், வா.வே.சு உட்பட ஏராளமான நம் முன்னோர்கள் இந்தக் கொடிக்காகச் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்தவர்வர்கள். நீலகண்ட பிரம்மச்சாரி , திருப்பூர் குமரன், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோரும் பெரும் இன்னல்களை சந்தித்து இந்த கொடிக்காக பாடுபட்டனர்.