சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.20) தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக தர்மபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் 13 ஆயிரத்து 587 பயனாளிகளுக்கு 157 கோடியே 41 லட்சத்து 88ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று பேசிய மு.க. ஸ்டாலின், "தர்மபுரி மாவட்டம் என்றாலே இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும்.
ஒன்று, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்; மற்றொன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டத்தை தொடங்கி வைத்தது.
அதிமுக அரசு கிடப்பில் போட்டது
கிருஷ்ணகிரி - தர்மபுரி மக்களின் மிகப்பெரிய குறையாக இருந்த குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் பொருட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது.