சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகமாக இருந்தாலும், படிப்பிற்கு ஏற்ற வேலைக்கான திறன் இல்லை என கல்வியாளர்கள் பலரும் வேதனை தெரிவித்தனர். இதனால், கல்லூரியில் மாணவர்கள் படிப்பினை முடித்த உடன் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 மாநிலப் பல்கலைக் கழகங்களிலும் புதிய பாடத்திட்டங்களை உயர்கல்வி மன்றம் 2023-24 ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்கிறது. இது குறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி கூறும்போது, “கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவை வளர்ப்பதுடன், வேலை வாய்ப்பினையும் உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தமிழுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதே அளவில் தற்பொழுதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கீழடி முதல் உக்ரைன் போர் வரை: பி.காம் பாடப்பிரிவில் தமிழ் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது பி.காம் படிப்பு உட்பட இளங்கலையில் 4 பருவத்திலும் தமிழ், ஆங்கிலம் பாடம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரலாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது. முன்னர் தமிழ்நாடு வரலாற்றில் சங்ககாலம் கற்பிக்கப்பட்டது.
ஆனால், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஆய்வுகள் கிமு 6-ம் நூற்றாண்டிற்கு முன்னர் இருந்தாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தையும் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். இந்திய வரலாற்றிலும், சிந்து சமவெளி, வேதகால நாகரிகம் என முன்பு ஆரம்பித்தனர். ஆனால் தற்பொழுது தமிழகர்களின் நாகரிகம் 1,500 ஆண்டுகள் தொன்மையானது என்பதால், அதனையும்,வேதகால நாகரிகம் போன்றவற்றை வைத்துள்ளோம்.
மாணவர்களுக்கு தற்பொழுதைய நடப்புகளை, உதாரணமாக உக்ரைன் போர் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுத் தரும் வகையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. இது போன்ற தற்கால நிகழ்வுகளை தெரிந்துக் கொள்வதால், மத்திய, மாநில அரசின் பணிக்கான போட்டித் தேர்வினை எதிர்கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.
வேலைவாய்ப்பு: அறிவியல் பாடங்களில் பொறியியல் பாடத்திட்டதிற்கு இணையாக கொண்டு வந்துள்ளோம். அவற்றை சீரமைத்து அடுத்த கல்வியாண்டில் செயல்படுத்தப்படும். 126 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கணக்கு, இயற்பியல் பாடத்தில் மாணவர்கள் அதிகளவில் சேராமல் இருப்பதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இது அவர்கள் வேலைக்கு செல்வதற்கான கருவியாக பயன் அளிக்கும்.