பாஜக மத்தியில் பெரும்பான்மையுடன் இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்படி ஒரு கட்சி இருக்கின்றதா, அவர்கள் முன்வைக்கும் சித்தாந்தம் என்ன என்று பலருக்கும் தெரியாது. இருப்பினும், தொடர்ந்து பாஜக தலைவர்கள் சர்ச்சையான கருத்துகள் மூலம் தமிழ்நாட்டில் பேசுபொருளாக ஊடகத்தின் வெளிச்சத்தில் இருந்து வருகின்றனர்.
ஆனால், தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் சார்ந்த கருத்துகள் பெரிதும் பேசுபொருளாக மாறி வருகின்றது. குறிப்பாக இணையத்தில் பாஜக-விற்கு ஆதரவாகப் பலர் பேசி வருவது, தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் 2021 வருவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், திராவிட சித்தாந்தம் கொண்ட அதிமுக, திமுக கட்சிகளைவிட இணையத்தில் பாஜக கட்சியின் செயல்பாடுகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. மத்தியில் ஆட்சியில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக தெரிவித்தாலும், அவர்களின் சித்தாந்தத்தை தமிழ்நாடு மக்களுக்கு எடுத்துச் செல்ல பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இதைப் பற்றி நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய பேராசிரியர் இரா. திருநாவுக்கரசு, '2004ஆம் ஆண்டில் வாஜ்பாய் காலத்தில் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாகவே அனைத்தும் நடந்தது. வெளியே ஆதரவு இருப்பதுபோல் பிம்பம் உருவாக்கப்படுகின்றதே தவிர, அடிப்படையில் ஒரு கட்சி, அமைப்பு ரீதியாக மக்கள் மத்தியில் எப்படி இருக்கும் என்பது தான் இறுதி வெற்றியை முடிவு செய்யும். பிரபலங்கள் பாஜக-வில் இணைவதால் அந்தக் கட்சி பலமாகிவிட்டது என்று கூற முடியாது. ஏதோ ஒன்று எதிர்பார்த்துதான் ஒருவர் ஒரு கட்சியில் இணைகின்றனர்.