தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுமா? அரசு பதிலளிக்க உத்தரவு - இந்து சமய அறநிலைய துறை

சென்னை: ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோயில் அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hindu-priest-seek-corona-relief-funds-notice-to-state-hc-order
hindu-priest-seek-corona-relief-funds-notice-to-state-hc-order

By

Published : Jul 4, 2020, 7:12 AM IST

பிரபல காலை நாளிதழின் பதிப்பாளரான ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனுவில், "கரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 60 நாள்களாக கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கோயில்கள் திறக்க ஜூன் 30ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் மூடப்பட்டுள்ளதால், கோயிலைச் சார்ந்த அர்ச்சகர்கள், வேதபாரயணர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலைய துறையின் உபரி நிதியில் இருந்து, 10 ஆயிரத்து 448 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கூறி, கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையில் 300 கோடி ரூபாய் உபரி நிதி உள்ளதால் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மாதம் 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ள நிலையில் 10 ஆயிரத்து 448 அர்ச்சகர்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்படும் என்ற அரசாணை தவறானது. அனைத்து அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோயில்கள் மூடியுள்ள நேரத்தில் பணிபுரியாவிட்டாலும் முழு சம்பளத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் பெறும் நிலையில், கோயில் நடைமுறைகள் மூலம் தினசரி வருமானம் ஈட்டுபவர்களின் நலனை அரசு கருத்தில் கொள்ளவில்லை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details