சென்னை:இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டின் தமிழ்நாடு அரசின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு ஜனவரியில் வந்த போதே அதில் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 17 ஞாயிறு என்று இருந்ததை சுட்டிக்காட்டி உடனே திருத்தம் வெளியிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொண்டோம்.
ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் இது குறித்து எடுக்கவில்லை. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது. கிறித்துவ, முஸ்லீம் பண்டிகைகள் குறித்து அந்த மதத் தலைவர்களை ஆலோசித்து அதனை அறிவிக்கும் தமிழ்நாடு அரசு, இந்துக்களின் பண்டிகைகள் பற்றிய விபரத்தை தான்தோன்றித்தனமாக அறிவிப்பது அறிவுடைய செயல் இல்லை.
தமிழ்நாட்டில் சுமார் 8 சதவீதம் முஸ்லீம்கள் உள்ளனர். ரம்ஜான் விடுமுறை குறித்து வருடத்தின் ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டாலும், முதல் நாள் மாலை ஹாஜியின் கண்களுக்கு பிறை தெரியவில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் ரம்ஜான் விடுமுறையை மாற்றி தமிழ்நாடு அரசு கெஜட் - அரசாணை அவசரம் அவசரமாக அன்று மாலையே வெளியிடுகிறது.
அதுவே, தமிழ்நாட்டில் 88 சதவீதம் உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தவறான தேதியில் அறிவித்ததை இந்து முன்னணி மற்றும் ஆன்மிக பெரியவர்கள் கருத்துக்களை சுட்டிக்காட்டிய பின்னரும் தமிழ்நாடு அரசு திருத்தி அரசாணை வெளியிடாததை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாக இது இருக்கிறது.