தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜம்பு டூ வண்டலூர்.. 2 இமாலயக் கரடிகள் வருகை.. பின்னணி என்ன? - kashmir

Himalayan Black Bears: சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு, விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் காஷ்மீரில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு (1ஜோடி) இமாலயக் கருங்கரடிகள் பரிமாற்றம் செய்யப்பட்டன.

வண்டலூர் பூங்காவிற்கு 2 இமாலயக் கருங்கரடிகள் வருகை
வண்டலூர் பூங்காவிற்கு 2 இமாலயக் கருங்கரடிகள் வருகை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 10:36 PM IST

Updated : Nov 10, 2023, 10:44 PM IST

சென்னை:விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 (1ஜோடி) புலிகள் கொடுத்து, அதற்கு பதிலாக காஷ்மீரில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு (1ஜோடி) இமாலயக் கருங்கரடிகள் பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்படி, ஜம்மு தாவியில் இருந்து சென்னை சென்ட்ரல் வருவதற்கு, அந்தமான் விரைவு ரயிலில் விலங்குகளுக்கான சிறப்புப் பெட்டி இணைக்கப்பட்டு, ஒரு இணை கரடிகள் இன்று (நவ.10) கொண்டுவரப்பட்டன. மேலும் 15ஆம் தேதி காஷ்மீர் செல்லும் இதே ரயிலில், இங்கிருந்து 2 வங்கப்புலிகள் (1ஜோடி) அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளதாக, உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வண்டலூர் பூங்காவில் தற்போது, 170 வகைகளைச் சேர்ந்த ஆயிரத்து 977 வன விலங்குகள் உள்ளன. மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள அரிய மற்றும் அழிந்து வரும் வன விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த பூங்கா செயல்படுகிறது. இப்பூங்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள், விலங்குகள் என எட்டு வகையாக 2 ஆயிரத்து 400 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மீன் காட்சியகம், பட்டாம்பூச்சி குடில், இரவு நேர விலங்கு உலாவிடம் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன. இங்கு, வார நாட்களில் 2 ஆயிரத்து 500 முதல் மூவாயிரம் வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 7 ஆயிரத்து 500 முதல் ஒன்பதாயிரம் வரையிலும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும். இந்த பூங்காவில் ஆண் இமாலயக் கருங்கரடி ஒன்று தன்னந்தனியாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு ஜோடி கரடி இல்லை. இதை கருத்தில் கொண்டு, விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீர் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமாலயக் கருங்கரடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், “புலிகள் இனப்பெருக்கம் செய்வதில் தனி கவனம் செலுத்தும் விதமாக, இந்திய வனத்துறை மற்றும் தமிழக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. மேலும், புலிகள் பெரும்பாலும் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், இந்தியாவின் பல்வேறு இடங்களில் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ஆண் இமாலயக் கரடி வண்டலூர் பூங்காவில் ஒன்று தான் இருக்கிறது. இதற்காக தற்போது இரண்டு இமாலயக் கருங்கரடியை பரிமாற்றம் செய்துள்ளோம். மேலும் காஷ்மீரில் இருந்து இந்த கரடிகளுடன், ஜம்பு உயிரியல் பூங்காவின் பணியாளர்கள், வன அலுவலர்கள் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் உடன் வந்தனர்.

தற்போது கொண்டுவரப்பட்ட விலங்குகளின் உடல்நிலை, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள கால்நடை உதவி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தற்காலிக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்த கால அவகாசம் முடிந்த உடன், மக்கள் காட்சிப்பகுதிக்கு மாற்றப்படும்.

மேலும், ஜம்பு உயிரியல் பூங்காவில் புலிகள் பராமரிப்பது இதுவே முதல் முறை என்பதால், அவர்களின் விலங்கு பராமரிப்பாளர்கள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் ஊழியர்களிடமிருந்து, ஒரு வார காலத்திற்கு புலிகளைப் பராமரிப்பது குறித்த நேரடிப் பயிற்சியைப் பெறுவார்கள்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கோவை கிட்டாம்பாளையம் மக்கள்.. பறவைகளுக்காக பாசமுடன் எடுத்த முடிவை விளக்கும் சிறப்புத் தொகுப்பு!

Last Updated : Nov 10, 2023, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details