சென்னை:மலேசியாவை தலைமையிடமாகக் கொண்ட ஹிஜாவு என்ற நிதி நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, தமிழ்நாட்டில் சுமார் 800 கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹிஜாவு நிறுவனத்தின் உரிமையாளர் சௌந்தரராஜன், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் உட்பட 21 நிர்வாகிகள் மீது மோசடி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் ஏஜென்ட் நேரு, மணிகண்டன், முகமது ஷெரிப் ஆகிய மூவரை கடந்த நவம்பர் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சாந்தி பாலமுருகன், சுஜாதா, கல்யாணி என இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிஜாவு நிறுவனத்தின் உரிமையாளர் சௌந்தர்ராஜன் நேற்று(பிப்.20) பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.