சென்னை: இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளித்துள்ளார்.
இளங்கலை வகுப்புக்கான அறிக்கை
அதனடிப்படையில் கல்லூரிகள் திறந்து செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.எல், பி.சி.ஏ, பி.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட இளங்கலை, முதுகலை, பட்டயம் ஆகிய மூன்று ஆண்டு படிப்பு மாணவர்களில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமையும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெறும்.
முதுகலை வகுப்புக்கான அறிக்கை
இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, தற்போது இரண்டாம் ஆண்டில் பயில்பவர்களுக்கும் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தப்படும்.
நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பு
பி.இ, பி.டெக், பி.எஸ்.சி (அக்ரி) உள்ளிட்ட நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக் கிழமையும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக் கிழமையும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.