சென்னை: தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 28) செய்தியாளர்களை சந்தித்தஉயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, இணையதளம் வகுப்பு குறித்து தகவல் தெரிவித்தார்.
அதில், தமிழ்நாடு பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவித்தார். ஆன்லைன் வகுவுகளில் மாணவர்கள் பங்கேற்க கூடிய வகையில் சிம் கார்டுகள் வழங்கப்படும் என்றார்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு, தேர்வுகளில் மதிப்பெண் கணக்கீடு செய்வது போல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறை கொண்டுவருவது குறித்து மாணவர்கள் முன்நிறுத்திய கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து பொறியியல் படிப்புகளான பி.இ , பி.டெக் ஆகியவற்றிற்கு நேற்று (ஜூலை 27) மாலை வரை 41,363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்தாகவும், இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
அதே போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,26,748 விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், இவை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி திறப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்ற அவர், அனைத்து தனியார் கல்லூரிகளிலும் கரோனா காலம் முடியும் வரை 75 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அறிவித்தார்.
அண்ணா பல்கலை கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகளில் தோல்வி அடைந்தால் தகுதி நீக்கம் செய்யப்படும் முறை நடைமுறையில் உள்ளது எனவும், அவை மாற்றம் செய்யப்பட்டு பிற கல்லூரிகளில் உள்ளது போல்அரியர் தேர்வுகள் எழுத வாய்ப்பளிக்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பேற்க முடியாது- அண்ணா பல்கலைக்கழகம்!