சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, குன்னம் தொகுதி செந்துறையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கப்படுமா? என்று குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அரியலூர் மாவட்டத்தில் அரசுக் கலை மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 560 காலியிடங்கள் இருப்பதாகவும் பெண்களுக்காக வேப்பூரில் பெண்கள் கலைக் கல்லூரி தொடங்கி உள்ளதாகவும் கூறினார். வரும் காலங்களில் மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப கல்லூரி கட்டித்தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
'கௌரவ விரிவுரையாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு பரிசீலனை'
சென்னை: அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.வா. வேலு கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அன்பழகன், அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பதவிக்காகக் கூடுதலாக 2,331 இடங்களுக்குத் தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.