சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூன் 22) உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக உயர்கல்வித் துறை வளர்ச்சி பெற்று வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 2,46,295 மாணவ மாணவியரிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான இடங்கள் 1,07,299. இதுவரை 80,804 இடங்கள் நிரப்ப பட்டுள்ளன. 27,215 காலியிடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான தேதி வரும் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ளதால், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட இருக்கிறது.
தமிழக ஆளுநர் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசினாலும், மாநில கல்விக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது, 2 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். அடுத்த மாதம் 3ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. திறந்த பின்னரும் கல்லூரிகளில் காலியிடங்கள் இருப்பின், 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.