சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31 ஆயிரத்து 488 காலியாக உள்ளன. மேலும் 1 லட்சத்து 7ஆயிரத்து 299 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்பட்ட முதல் மற்றும் 2ம் சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற முடிந்த நிலையில் 31 ஆயிரத்து 488 காலியாக உள்ளன. தற்போது மாணவர்களை விட மாணவிகள் 12 ஆயிரத்து 569 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். மேலும் 31621 மாணவர்களும், 44190 மாணவிகளும் சேர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரியிலும் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் காலியாக உள்ள இடங்களில் சேர்க்கைக்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் 21000 சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மே மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரையில் பதிவு செய்தனர்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு கல்லூரியில் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது.
இதில், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ் மொழி பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.