தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 7, 2023, 8:31 AM IST

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை

அரசு உத்தரவை மீறி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வசூல் செய்யும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

சென்னை:முன்னதாக,சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை சட்டம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை அளித்தனர்.

அதன் அடிப்படையில் முதலமைச்சர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

பின்னர், முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களான மருத்துவக் கல்லூரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது.

அதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் பட்டப் படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி அளிக்கும் திட்டத்தினை அமல்படுத்திட அரசு உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல், அரசு பாலிடெக்னிக் மற்றும் சிறப்பு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளித்தும், மீன்வள கல்லூரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அரசாணையில், மாற்றுத்திறனாளிகள் தமது கல்லூரிகளில் கல்விக் கட்டணம் தவிர சிறப்பு கட்டணம், ஆய்வு கூட கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் போன்ற இதர கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது எனவும், மாற்றுத் திறனாளிகள் பெரும்பாலானோர் வசதியற்ற பொருளாதார சூழ்நிலையில் இருப்பதாலும், அவர்கள் உயர் கல்வி தொடர இயலாத நிலை ஏற்படுவதாகவும் உயர் கல்வி பயிலாதது மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கின்றது.

ஆகையால், மாற்றுத்திறனாளிகள் இடையூறு இல்லாமல் உயர் கல்வி தொடர ஏதுவாக கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தது போன்று தனிக் கட்டணத்திற்கும் அரசு விளக்கு அளிக்க வேண்டியது அவசியம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் வலியுறுத்தி இருந்தார்.

எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகிய உயர் கல்வி படிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தனிக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அரசாணையின்படி அ,ரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தும், தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. எனவே, அரசின் உத்தரவை பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை கல்லூரியின் முதல்வர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாெறியியல் படிப்பில் சேர ரேண்டம் எண் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details