சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மொத்தம் ஒரு லட்சத்து 7ஆயிரத்து 299 இடங்கள் உள்ள நிலையில் 84 ஆயிரத்து 899 மாணவர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை சேர்ந்துள்ளனர். மேலும், ஜூலை 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுவரை 36 ஆயிரத்து 626 மாணவர்களும், 48 ஆயிரத்து 273 மாணவிகளும் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் படித்த 23ஆயிரத்து 295 மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. ஜூலை 3ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு
www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரையில் பதிவு செய்தனர்.
மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அந்தக் கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.