தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக். 5 முதல் உயர் நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை! - நீதிமன்ற வழக்கு விசாரணை

சென்னை: உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் ஐந்தாம் தேதிமுதல் மேலும் 21 நீதிபதிகள் தங்களுக்கான நீதிமன்ற அறையிலிருந்து நேரடியாக வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Sep 30, 2020, 8:32 PM IST

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 150 நாள்களுக்கு மேல் வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டுவந்தது. வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் ஏழாம் தேதிமுதல் இரண்டு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகளும் (மொத்தம் 12 நீதிபதிகள்), காணொலி காட்சிகள் மூலமாக வழக்குகளை விசாரணை செய்தன.

இந்நிலையில், அக்டோபர் ஐந்தாம் தேதிமுதல் மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை நீதிமன்ற அறையில் இருந்து விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது.

நீதிபதிகள் ரவிசாந்திரபாபு, பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணா, பாரதிதாசன், கிருஷ்ணகுமார், பார்த்திபன், ரமேஷ், ரவீந்திரன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், கார்த்திகேயன், டீக்கா ராமன், சதீஷ்குமார், பவானி சுப்பராயன், ஜெகதீஷ்சந்திரா, தண்டபாணி, ராஜமாணிக்கம், பொங்கியப்பன், ஹேமலதா, சரவணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நீதிமன்ற அறையில் இருந்து நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.

நீதிமன்ற அறைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், காலையில் ரிட் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகளும், மதியம் (பிற்பகல்) மேல் முறையீட்டு வழக்குகளும், உரிமையியல் வழக்குகளும் விசாரிக்க உள்ளதாகவும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. மனுதாரர்கள், வழக்குரைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வழக்குகள் நேரடியாகவோ? காணொலி காட்சி மூலமாகவோ? விசாரிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையும் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதித் துறை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்ட செய்தி குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:அன்லாக் 5.0: திரையரங்குகளை திறக்க அனுமதி

ABOUT THE AUTHOR

...view details