சென்னை: சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையே வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வாடகைதாரர்கள் வழக்கை நீட்டிக்க விருப்பப்படலாம் என்றும், ஆனால் அதற்கு நீதிமன்றங்கள் உதவக்கூடாது
என்றும் தெரிவித்துள்ளார்.
வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என நீதிமன்றம் கருதினால், அந்த மனுக்களை முடிந்தவரை விரைவாக தீர்க்க வேண்டும் என்றும், தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
வாடகைதாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை என்றும், ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான காலத்திற்குள் நீதி கிடைக்க நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும்,வழக்குகள் நீண்ட காலம் நடப்பது விரக்தியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள நீதிபதி, நவீன தொழில்நுட்பத்தில் முன்னேறிய இந்த உலகில், பொதுமக்களுக்கு எளிதாக நீதி பரிபாலன முறை தேவை என்று தெரிவித்துள்ளார்.
தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எளிதாக அணுகும்வகையில், நீதிபரிபாலன முறை, தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், நீதித்துறை நடைமுறை, மனுக்களை கையாளும் முறை, உத்தரவுகள், தீர்ப்புகளை எளிதாக்குவதுதான் தற்போதைய தேவை எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். மனுதாரரின் வழக்கை இரண்டு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அம்மா உணவக சாப்பாட்டில் பல்லி? 7 பேருக்கு வாந்தி மயக்கம்!