சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் வெளியானது தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்து இருந்தார். இது குறித்து கோயில் இணை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்படி பழனி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து ஆஜராகி, கோயிலுக்குள் செல்போன்களை கொண்டு சொல்லக்கூடாது என அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளதாக விளக்கம் அளித்தார். கோயில்களுக்குள் செல்போன் போன்ற கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், அதை அமல்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் திருப்பதி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாததை சுட்டிக்காட்டி, அதைப் போல தமிழகத்தில் ஏன் அமல்படுத்தக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.