சென்னை:சிதம்பரத்தைச் சேர்ந்த தீட்சிதர்களின் குடும்பத்தில் தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும், இது தொடர்பாக கடந்த வருடம் வழக்குப் பதியப்பட்டு, தீட்சிதர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சரண்யா, சிதம்பரம் கோயிலில் சிறார் திருமணங்களை தடுக்க நிரந்தர கண்காணிப்புக் குழுவை அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், "குழந்தைத் திருமணங்களைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது.
1929ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில், 1978ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கான திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த சட்டங்களை பொருட்படுத்தாமல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த குழந்தை திருமணங்களை தடுக்க இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.