சென்னை:மூத்த குடிமக்களின் வீட்டில் வாடகை தராமல் ஆக்கிரமித்து உள்ள திமுக வட்ட செயலாளரை 48 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, தியாகராய நகரில் உள்ள அப்துல் அஜிஸ் தெருவில் உள்ள கிரிஜா என்பவரின் வீட்டில் திமுகவை சேர்ந்த வட்டச் செயலாளர் இராமலிங்கம் என்பவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். 2017 முதல் வாடகை தராததால் வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் முறையிட்டு உள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் முறையிடப்பட்ட நிலையில் வீட்டை காலி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.
ஆனாலும் ராமலிங்கம் வீட்டை காலி செய்யவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் கிரிஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். இதனையடுத்து
அவர் பிறப்பித்த உத்தரவில், 75 வயதான கணவருடன் வசிக்கும், 64 வயதான மனுதாரரின் வீட்டை ஆகஸ்டு 24ஆம் தேதிக்குள் காலி செய்வதுடன், வாடகை பாக்கியையும் கொடுத்துவிடுவதாக ராமலிங்கம் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, சென்னை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி, இந்த உத்தரவு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் காவல் துறையினரை அனுப்பி, கிரிஜாவின் வீட்டில் இருந்து ராமலிங்கத்தை வெளியேற்றி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:காதல் திருமணம் செய்த மகளுக்கு துணை போனதால் ஆத்திரம்.. சொத்துக்காக கணவனை கடத்தி மனைவி சித்ரவதையா? என்ன நடந்தது?