சென்னை:ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில், தமிழ்நாடு பால்வளத்துறை, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில், தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜாமீன் வழங்க எதிர்ப்பு
இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேலைக்காக பணம் வாங்கியது தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் 11 பேர் மோசடிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக மோசடி மட்டுமல்லாமல், ராஜவர்மன் என்பவரை கொலை செய்ய முன்னாள் அமைச்சர் திட்டமிட்டதும், இவ்வழக்கு தொடர்பான புகார்களில் இருந்து தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.