ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் மத்திய அரசின் உதவியுடன் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2012ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வந்த இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்து, 2018-19ஆம் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியது.
அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் சுப்பையா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், 2018-19 கல்வியாண்டில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு கல்வி கட்டண உதவித்தொகை நிராகரித்தது சட்டவிரோதமானது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்கல்வி கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.