சென்னை: சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டின் பக்கங்கள் முடிந்த நிலையில், கூடுதல் பக்கங்களை இணைப்பதற்கு விண்ணப்பித்துள்ளார். கூடுதல் பக்கங்களை இணைத்து பாஸ்போர்ட் வழங்கிய போது, பாஸ்போர்ட் செல்லுபடியாகும் கால அவகாசம் குறைக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் பத்தாண்டுகள் செல்லத்தக்க வகையில் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
கார்த்தி சிதம்பரம் மனுத் தாக்கல்
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தரப்பில், "2010 ஆம் ஆண்டிலிருந்து பாஸ்போர்ட் மறுமுறை வழங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் ஒரே வழிமுறையே பின்பற்றப்படுகிறது. ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட் பக்கத்துடன் கூடுதல் பக்கங்களை இணைப்பதற்கு வழிமுறை இல்லை. பாஸ்போர்ட் பக்கம் முடிவடைந்தால் புதிய பாஸ்போர்ட் எண்ணுடன் புதிய பாஸ்போர்ட் தான் வழங்கப்படும். எனவே, இந்த சூழலில் பழைய பாஸ்போர்ட் செல்லும் காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் புதிய பாஸ்போர்ட்டின் காலம் முடிவு தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.