கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஊரடங்கு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால், விலங்குகள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். நேற்று முன்தினம் (மே.19) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு எப்படி உணவு, தண்ணீர் வழங்கலாம் என்பது குறித்த யோசனைகளை தெரிவிக்கும்படி, மனுதாரர் தரப்புக்கும், அரசுத்தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை நேற்று (மே.20)ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று(மே.20) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெரு விலங்குகளுக்கு உணவளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாகவும், கால்நடைத்துறையுடன் இணைந்து செயல்பட அந்நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தெரு விலங்குகளுக்கு உணவளிக்கச் செல்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது.