தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இந்த தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால் தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்தலை நிறுத்தி வைத்த சங்க பதிவாளரின் உத்தரவை எதிர்த்து வாதிட்டார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, வேறு ஒரே நீதிபதியின் முன் வழக்குகளை பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், அதனால் இந்த உரிமையியல் வழக்குகளையும் வேறு நீதிபதியின் முன் பட்டியலிட பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி பெஞ்சமின் மற்றும் ஏழுமலை தொடர்ந்த உரிமையியல் வழக்குகளையும், ஒரே நீதிபதியின் முன் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக உத்தரவிட்டார்.