தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம்!

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

high court

By

Published : Nov 25, 2019, 11:05 PM IST

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல், பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், கால நீட்டிப்பு செய்ய உத்தரவிடக்கோரி பொன் மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பதவி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அதுவரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதுபோன்ற எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் பொண் மாணிக்கவேலின் பதிலுக்காகவே வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்திருப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி அரசு உயர் நீதிமன்றத்தை மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். நவம்பர் 30ஆம் தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைவதால், அதன்பின் அவரை பணி நீக்கம் செய்ய அரசு முயற்சிப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொன்மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து கடந்த 2018 நவம்பர் 30ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலே நீடிப்பார் என கூறப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவரது பதவிக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

மேலும், பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பதவி நீட்டிப்பு கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பதவிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் எனவும், பதவி நீட்டிப்பு மனுவை பொறுத்தவரை தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறபிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அப்போது, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் இரு அமைச்சர்கள் தலையிடுவதாக பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டுயிருந்தார். அதே நேரத்தில், மேலும் ஒரு அமைச்சர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுகிறார் எனவும் குற்றஞ்சாட்டினார். எனவே, இந்த அமைச்சர்களின் பெயர்களை பொன் மாணிக்கவேல் வெளியிட வேண்டும் என கோரினார். இதையடுத்து அனைத்து வழக்குகளின் விசாரணையையும் டிசம்பர் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திகை தாக்கல் செய்துள்ளீர்கள் - உயர் நீதிமன்றம் கேள்வி?

ABOUT THE AUTHOR

...view details