சென்னை: பிளாஸ்டிக் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தும் மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. அதிலும் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி போடும் பிளாஸ்டிக் பொருட்கள் தினமும் டன் கணக்கில் குப்பைகளாக கொட்டப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்திருந்தது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மட்கக்கூடிய பைகளுக்கு பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி நிறுவனமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சோபனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பைகளை மட்கச் செய்வதற்கான உரக்கிடங்குகள் தமிழ்நாட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.