மானுடதிற்கும் மனிதனிற்கும் இடையில் என்னவிருக்கிறது இந்த நூற்றாண்டில் ஒன்றுமில்லை, இருப்பது வெறும் விஞ்ஞானம் மட்டுமே. விஞ்ஞானத்தை வைத்து நாற்றத்தை போக்கமுடியுமா?. நாற்றம் மனிதன் உள்ளவரை இருக்கும் என்பதை அறிந்து நாம் எப்போது செயல்படப்போகிறோம். நாற்றத்தில் சாதி, மதம் கிடையாது என்பதை ஏன் அறிய மறுக்கிறீர்கள்.
நாற்றம் என்ற வார்த்தை பயன்படுத்தாமல் மலம் என்று பயன்படுத்தியிருந்தால் மூக்கை பொத்தும் சிலருக்கு, எங்கே தெரியப்போகிறது மலத்தை அள்ளுபவனின் வலியும் வேதனையும். தேடிச் சேர்த்து, தின்று தீர்த்த நம் சமூகம் வாரிசுகளுக்கு வெறும் காகிதத்தையும் இயந்திரத்தையும் மட்டுமே அளிக்கப்போகிறது என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்.
இயந்திரத்தில், இதயத்தை பொருத்த முயற்சிக்கும் அறிவியல், இயந்திரமாகிக் கொண்டிருக்கும் மனிதனின் இதயத்தை எப்போது சரி செய்யப்போகிறது. இயந்திரத்திற்கு நாற்றம் தெரியுமா?, மலத்தின் அருவருப்பு தெரியுமா? குடலை புரட்டி எடுக்கும் துர்நாற்றம் தெரியுமா? ஆனால் மனிதனுக்கு தெரியும். நான் வேறு யாருக்கும் சொல்லவில்லை, மனிதன் என்பவன் நீயும் நானும் தான்.
மனிதக் கழிகளை மனிதர்களை வைத்தே அள்ள வைப்பது சரியா? வாக்கியமே தவறு மனிதக்கழிவுகளை குறிப்பிட்ட சில மனிதர்களை வைத்து அள்ள வைப்பது சரியா? எத்தனைச் சட்டம் வந்தாலும், மனிதன் மாறினால் தான் சட்டம் நிறைவுபெறும் என்பதற்கு சென்னையில் ஓர் அவல நிலை அரங்கேறியுள்ளது. சட்டம் கூட மலத்தைச் சென்றடைய யோசனை செய்கிறது போல.