தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் அதே பாதையில் பயணிக்காமல் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க அதிக ஆர்வப்படுவர். ஏனெனில், அந்தப் பாதையில்தான் ஒரு பன்முகம் கொண்ட பக்குவம் கொண்ட கலைஞன் தான் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கக்கூடிய ஸ்பேஸ் கிடைக்கும்.
விவேக் ஏகப்பட்ட படங்களில் தன்னை பன்முகம் கொண்ட கலைஞர் என்று நிரூபித்தாலும், பாய்ஸ் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த மங்களம் கதாபாத்திரத்தின் பக்குவம் எப்போதும் மறையாதது.
டீன் ஏஜ் இளைஞர்களை பொறுத்தவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களோடு பழகுவது வெகு இயல்பாகவே அமைந்துவிடும். நாம் எப்போது அந்த வயதுக்குள் நுழைவோம் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்களிடமும், நாம் ஏன் இளைய வயதைவிட்டு இந்த வயதுக்குள் நுழைந்தோம் என்ற ஏக்கம் 30 வயதைக் கடந்தவர்களிடமும் தென்படும்.
அதிலும் அந்த 30 வயதைக் கடந்தவர் காதல் தோல்வி அடைந்தவராகவோ, டீன் ஏஜ் இளைஞர்கள் மனதுக்குள் அமுக்கி வைத்திருக்கும் விஷயங்களை வெளிப்படையோடு பேசுபவராக இருந்தாலோ டீன் ஏஜ் பாய்ஸ்க்கு அந்த நடுத்தர வயதுக்காரர்தான் ரோல் மாடல்.
அப்படித்தான் பாய்ஸ்க்கு மங்களம். பாய்ஸ் பக்குவமில்லாத கொண்டாட்டத்தில் இருக்கும்போது மங்களம் மட்டும் பக்குவம் கலந்த கொண்டாட்டத்தில் இருப்பார். மதுபானக் கடையில் ஊதா நிற சட்டையோடும், கழுத்தில் கட்டிய டையோடும் மங்களம் உள்ளே நுழைந்து பாய்ஸோடு கலக்கும்போது புது போதை ஒன்று அவர்களுக்குள் குடியேறும்.
அதன் பிறகு, ஹரிணிக்காக சாலையில் நிர்வாணமாக ஓடி கைது செய்யப்பட்ட முன்னாவை பிணையில் எடுப்பது, அவர்களின் எதிர்காலத்திற்காக தன்னுடைய நிகழ்காலத்தை அடகுவைப்பது என மங்களம் பாய்ஸ்க்காகவே வாழ்ந்த அவர்களின் இன்னொரு தாய், தந்தை.
முன்னா, ஹரிணியின் காதலை வைத்து நடக்கும் பஞ்சாயத்து சீனில் சுஜாதாவின் வசனங்கள் ஒட்டுமொத்த டீன் ஏஜ் இளைஞர்களுக்காகவும் இருந்தது என்றால், அந்த எழுத்தின் வீச்சையும், வீரியத்தையும் அச்சு பிசகாமல் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருப்பார் மங்களம். முக்கியமாக, சுஜாதாவின் வசனங்கள் இளைஞர் தரப்புக்கு மட்டுமின்றி பெற்றோர் தரப்புக்கும் அமைந்திருக்கும். அந்த மீட்டரை பிடித்து விவேக், மங்களமாக அதகளம் செய்திருப்பார்.
“லவ்வுக்காக கரியர தொலச்ச அப்பா, அம்மா, கரியருக்காக லவ்வ தொலச்ச அப்பா, அம்மா. ஆனா நான் ரெண்டையும் தொலைச்சிட்டு குவார்ட்டர் அடிச்சிட்டு சுத்திட்டு இருக்கேன்” என்று மங்களம் பேசும்போது, வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளைத் தொலைத்தவனை கண் முன்னே நிறுத்தி, இரண்டையும் தொலைத்தால் ஒருவனின் வாழ்க்கை எவ்வளவு வெறுமையாக இருக்கும் என்பதை ஆர்ப்பாட்டமின்றி உணர்த்தியிருப்பார். அந்த ஒரு பஞ்சாயத்து சீன் சொல்லும், விவேக் எவ்வளவு பெரிய குணச்சித்திர நடிகன் என்று.