சென்னை: இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நேற்று முன்தினம் (டிச.8) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் வந்தபோது, அவர் வந்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் அவருடன் பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 ராணுவத்தினர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்று (டிச.9) டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
இந்நிலையில் நேற்று சென்னை சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் சென்னை ரயில்வே காவல்துறை மற்றும் சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவத்தினருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வீர வணக்கத்துடன் மரியாதை
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்ட்ரல் ரயில்வே ஏ.டி.ஆர்.எம் ஆனந்த், ரயில்வே பாதுகாப்புப் படை மூத்த டி.ஐ.ஜி சந்தோஷ் என்.சந்திரன், டி.ஐ.ஜி லூயிஸ் அமுதன், டி.ஐ.ஜி செந்தில் குமரேசன், சென்னை ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி முத்துக்குமார் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: டெல்லி வந்த பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி