சென்னையில் இருசக்கர வாகன பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்கள் மீது அபராதம் செலுத்தும் முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வேப்பேரி ஈவேரா சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சாரட்கர் நேரில் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சென்னையில் சாலை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதிக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாததாலேயே நடப்பது கண்டறியப்பட்டது. அதிலும் பின் இருக்கை பயணிகள் அதிகம் பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது.
இதனால் 129 மோட்டார் வாகன சட்டத்தின்படி பின் இருக்கை பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த சிறப்பு தணிக்கையில் இதுவரை இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, பின் இருக்கை பயணி ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.