பொங்கலுக்காக ஊருக்கும் செல்லும் சென்னை வாசிகள்-போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர் சென்னை:தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவர்கள் பணி செய்யும் இடத்திலிருந்து சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் குடியிருப்போரும் அவர்களது சொந்த ஊருக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நேற்று (ஜன.12) இரவு முதலே பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் அதிகமான கார் மற்றும் பிற வாகனங்களில் பொதுமக்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தால் சென்னை மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் , பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 பேருந்து நிலையங்களிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 3 நாட்களுக்குக் கூடுதலாக 4,449 சிறப்புப் பேருந்து நேற்று(ஜன.12) முதல் இயக்கப்பட்டன.
அந்த வகையில் தற்போது சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊறுகளுக்குச் செல்வதற்காகப் பேருந்துகள் மூலமாகவும் தங்களின் சொந்த வாகனங்கள் மூலமாகவும் பல ஆயிரக்கணக்கான சென்னையிலிருந்து வெளியேறுவதால் புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் அதிகமான வாகனங்கள் குவிந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் மற்றும் சானடோரியம் ஆகிய பேருந்து நிலையங்களில் அதிக அளவில் மக்கள் குவிந்து விடுவதால் கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கார்களுக்கு மாற்றுப் பாதை: பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் அதிகளவுக்கு ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று (ஜன.13) காலை முதல் அதிகப்படியானோர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வோர் தாம்பரம் பெருங்களத்தூர் வழியைத் தவிர்த்து கிழக்கு கடற்கரைச் சாலை, ஓஎம்ஆர் சாலையைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:Pongal Special Trains: பொங்கல் கூடுதல் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு