சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை எதிரொலியாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து தென் மாவட்டம் மற்றும் சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகை கொண்டாட 1.40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்களின் மூலமாகச் சென்றனர்.
தற்போது கொண்டாட்டம் முடிந்து, மீண்டும் சென்னை திரும்புகின்றனர். ஏராளமான வாகனங்கள் சென்னையை நோக்கி தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால், சென்னையின் நுழைவு வாயில் பகுதியான தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு சிறப்புப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் சென்னைக்கு வருவதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலைகளில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து அலுவல் பணி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் நிலையில், ஒரே நேரத்தில் மக்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதால் பெருங்களத்தூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதிகப்படியான தனியார் ஆம்னி பேருந்துகளும் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், ஆம்னி பேருந்துகள் அனைத்தையும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக கோயம்பேடுக்கு திருப்பிவிடும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம்னி பேருந்துகள் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி சென்று கோயம்பேடு செல்கின்றன. இதனால் திருவான்மியூர், அடையாறு, நீலாங்கரை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் வண்டலூரில் இறங்கி, மாற்று பேருந்துகள் மூலம் தாம்பரம் சென்று, அங்கிருந்து அவர்களின் பகுதிகளுக்குச் செல்கின்றனர்.