தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: பேருந்துகளுக்கு முண்டியடித்த மக்கள்! கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்த தாம்பரம்!

chennai traffic : ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மக்கள் பேருந்து நிலையங்களில் திரண்டனர். மக்கள் கூட்டம் அலைமோதியதால் தாம்பரம் ஸ்தம்பித்து போனது.

chennai traffic
சென்னை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 9:52 AM IST

சென்னையில் 44 ரயில்கள் ரத்து செய்த எதிரொலி: கூட்ட நெரிசலில் ஸ்தம்பித்த தாம்பரம்!

சென்னை :தலைநகர் போக்குவரத்தை பொறுத்தவரை பேருந்து மற்றும் மின்சார ரயில்கள் பிராதனமாக இயக்கப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்கள் மற்றும் அலுவலகவாசிகளின் முக்கிய தேர்வாக மின்சார ரயில்கள் உள்ளன.

திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம், சென்னை கடற்கரை மார்க்கமாக இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களை தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கடந்த அக்டோபர் 8ஆம் தேதி தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான, 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.

அதன்படி, காலை 10 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மின்சார ரயில்களில் பயணித்து சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சென்னையின் மையப்பகுதிகளுக்கு செல்பவர்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொருட்களை வாங்குவதற்கும் மற்ற இடங்களுக்கு செல்வபர்களும் இந்த மின்சார ரயில்களின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக ரயிலில் செல்லக்கூடிய அனைத்து பயணிகளும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் மூலம் சென்னை நகருக்கு செல்வதற்கு குவிந்ததால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும்தள்ளுமுள்ளு மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து மாநகர் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதன் காரணமாக அனைத்து பேருந்துகளும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அதிகநேரம் நின்று கொண்டு இருந்ததால் செங்கல்பட்டு, தாம்பரம் மார்கமான ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இதையடுத்து கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். மேலும் இதுபோன்று புறநகர் ரயில்களை ரத்து செய்யப்படும் நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: "பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வோம்" - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்!

ABOUT THE AUTHOR

...view details