பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுமார் 6 லட்சம் பேர் சென்றிருந்தனர். சென்னையில் இருந்து 16 ஆயிரத்து 221 சிறப்பு பேருந்துகள் கடந்த ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து இயக்கப்பட்டன.
பொங்கலுக்குப் பிறகு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2 ஆயிரத்து 50 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5ஆயிரத்து 727 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 15 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் விடுமுறை முடிந்து நாளை பணிக்கு திரும்ப வேண்டிய நிலையில், அனைத்து பயணிகளும் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை வாகனங்கள் நகர முடியாமல் வரிசையாக நின்று காட்சியளிக்கின்றன.
நேற்றைய தினமே (ஜனவரி 16) பெரும்பாலான பயணிகள் திரும்பினாலும், இன்று விடுமுறையின் கடைசி தினம் என்பதால் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.