சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டில் கொண்டாட்டப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகவும், தமிழ் பாரம்பரியத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையானது வருகிற 15ஆம் தேதி தமிழக மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தற்போதே தமிழ்நாடு முழுவதும் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், பொங்கலுக்கு முந்தைய 2 நாட்கள் வார இறுதி நாட்கள் என்பதால், நேற்று (ஜன.12) மாலையில் இருந்தே மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர். குறிப்பாக, தலைநகரான சென்னையில் வேலைக்காக வந்து வசிக்கும் பிற மாவட்ட மக்கள், சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட புறப்பட்டு விட்டனர்.
மேலும், சென்னையிலிருந்து சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் சிறப்பு பேருந்தும் இயக்கப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் சானடோரியத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி, விக்கிரவாண்டி வழியாகச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.