சென்னை:தீபாவளிப் பண்டிகை வரும் 12 ஆம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சென்னையில் ஐந்து இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக, சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதியில் இருந்து செல்லக்கூடிய பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால், தாம்பரம் சானிடோரிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், அதிக அளவில் பயணிகள் கூட்டம் சொந்த ஊர்களுக்கு செல்வதால் வண்டலூர், தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், தாம்பரத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதேபோல், வண்டலூர் பெருங்களத்தூர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்ப்படுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசலை போலீசார் சீர்செய்து வருகின்றனர்.