சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”காற்றின் திசை வேறுபாடு காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். வருகின்ற ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடம் (நாகப்பட்டினம்) 9 செ.மீ மழையும், ராமேஸ்வரம் , கடலூர், பாண்டிச்சேரி தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடுவதால், மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடர்ந்து வட கிழக்கு திசையில் காற்று வீசுவதால் வட கிழக்கு பருவ மழை ஜனவரி 10ஆம் தேதிவரை மழை தொடரும். மேலும் இந்த ஆண்டை (2020) பொறுத்தவரை தமிழ்நாட்டில் 984 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது சராசரி அளவான 946 மிமீ-யை விட நான்கு விழுக்காடு அதிகம். இதில் தென் மேற்கு பருவ மழை சராசரி அளவான 342 மிமீ-யை விட 24 விழுக்காடு அதிகமாக 421 மிமீ கிடைத்துள்ளது. அதே போல் வட கிழக்கு பருவ மழை சராசரி அளவான 449.7 மிமீ-யை விட ஆறு விழுக்காடு அதிகமாக 477 மிமீ கிடைத்துள்ளது.
தென் இந்தியாவில் ஆந்திராவில் தென் மேற்கு, வட கிழக்கு மழை அதிகமாக பதிவாகியுள்ளது. கேரள மாநிலத்தில் தென் மேற்கு மழை இயல்பாகவும், வட கிழக்கு மழை குறைவாகவும் பதிவாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை இயல்பாக கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட 39 விழுக்காடு குறைவாக கிடைத்துள்ளது. அதே போல் ஈரோடு, திருச்சி, நாமக்கல், நீலகிரி மாவட்டத்தில் குறைவாக கிடைத்துள்ளது. விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், புதுவை மாவட்டங்களில் 44 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளது.
சென்னையில் இந்த ஆண்டு சராசரி அளவான 1303 மிமீ மழையை விட 1572 மிமீ பதிவாகியுள்ளது. இதில் தென் மேற்கு மழை பொறுத்தவரை இயல்பான 439.6 மிமீ-யை விட ஒரு விழுக்காடு அதிகமாக 444 மிமீ பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவ மழை பொறுத்தவரை இயல்பான 784 மிமீ மழையை விட 1040.8 மிமீ அதாவது 33 விழுக்காடு அதிகமாக பதிவாகியுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் கடும் குளிர் - இந்திய வானிலை ஆய்வு மையம்