சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கும், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சியானது, தென் இலங்கைக் கடற்கரையில் நிலவி வருகிறது. இது சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து 3.1 கி.மீ வரை நீடித்துள்ளது.
கன மழை எச்சரிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (டிச.16) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.
நாளை (டிச.17):கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும். டிச.18ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை:கடந்த 24 மணி நேரத்தில், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையைப் பொருத்த வரை தமிழகம், புதுவையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை பெய்த மழையின் அளவு 388 மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 413 மி.மீ. எனவே, இது இயல்பை விட 6% சதவீதம் குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு என்பது 1.5 மி.மீ. இதில் அதிகபட்சமாக, செங்கல்பட்டில் 5 செ.மீ மழை ஆகும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் 19ஆம் தேதி வரை, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!