தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை; காரணம் என்ன..? - மீனம்பாக்கம்

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால், மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஜூன் மாதத்தில் கனமழை பெய்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி, மக்களிடயே எழுந்துள்ளது.

heavy rain shower in chennai - behind the reason
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை; காரணம் என்ன..?

By

Published : Jun 19, 2023, 10:42 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை என்பது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் பகுதிகளான கேரளா மற்றும் தமிழ்நாட்டின் நீலகிரி, தென்காசி மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை ஆகும். குறிப்பாக, தென்மேற்கு பருவமழையில் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.

வடகிழக்கு பருவமழைக் காலங்களில், மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஆனால் தற்பொழுது தென்மேற்குப் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் சென்னையில் இரவு முதல் விடிய விடிய மழை பெய்து உள்ளது. வாரத்தின் முதல் நாள் பெய்து உள்ள இந்த மழையால், அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 137 மில்லி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 67 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை மொத்தமாக 50 மில்லி மீட்டர் பதிவாகும் என கூறப்படுகிறது. ஆனால், இரவு பெய்த மழை வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு அதிகமாக பெய்துள்ளது. இதனால், திடீர் கனமழை குறித்து பல்வேறு தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் திடீர் கனமழை குறித்து பேசிய வானிலை ஆய்வாளர்கள், "தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்வது வழக்கம். ஆனால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்திருப்பது அரிதான ஒன்று. சென்னையை ஒட்டி உள்ள கடலோரப் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கனமழை பெய்துள்ளது" என்று தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக 1991 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 251 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனையடுத்து, 1996 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 450 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதற்குப் பின்னர் தற்பொழுதுதான் ஜூன் மாதத்தில் சுமார் 150 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details