இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நேற்று (அக். 09) அந்தமான், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்ளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
அதேபோல் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அந்தமான் கடல் பகுதியில் வரும் 14ஆம் தேதி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் 13 செ.மீ., தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், மதுரை தெற்குப் பகுதிகளில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.