சென்னை: குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரமாகத் தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் 4 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மேலப்பாளையம், பாளையங்கோட்டை, மனக்காவலம் பிள்ளை நகர், பெருமாள்புரம், என்ஜிஓ காலனி போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.