சென்னையில் கனமழையால் தேங்கிய மழைநீர் சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது.
இதனால், கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் பிரதான சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி, சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், வேளச்சேரி பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான காலி மைதானத்திலிருந்து அதிகப்படியான மழைநீர் வெளியேறியதால், அப்பகுதியில் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நேதாஜி சாலை, ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் கனமழை காரணமாக மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.
இதையும் படிங்க: கொட்டித்தீர்த்த மழையால் தெப்பக்குளமாகிய சென்னை ஏர்போர்ட்.. பயணிகள் சிரமம்!
மேலும், வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்ய உள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து தற்போது தேங்கி உள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று (நவ.03) முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக நாளை (நவ.04) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்திற்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விட்டு விட்டு பெய்து வரும மழையால் சென்னையில் வேளச்சேரி உட்பட பிரதான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, பருவமழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, 'தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் லேசான மழையும் அவ்வப்போது, பலத்த மழையும் பெய்யக்கூடும்' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!