சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(டிச.25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு மற்றும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.