சென்னை:வங்கக்கடல் பகுதியில் டிசம்பர் 2ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிச.3) புயலாக வலுப்பெற்றது. இந்த மிக்ஜாம் புயலானது இன்று (டிச.4) தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கரையோர பகுதிகளில் நிலவும் என்று கூறப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாகக் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்து இருந்தது. மேலும், இன்று புயல் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும் மிக்ஜாம் புயலானது தற்போது சென்னைக்கு கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. இந்த மிக்ஜாம் புயலானது 5ஆம் தேதி நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.