சென்னையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை (மே 26) மாலை பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டரங்கிற்கு வருகை தருகிறார். சுமார் 2 மணி நேரமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.
சென்னைக்கு பிரதமர் மோடி வருகையை ஒட்டி, ஐந்து அடுக்கு காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 22ஆயிரம் காவல் துறையினர் இன்று இரவு முதல் நாளை இரவு வரை, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் பறக்கத்தடை:பிரதமர் வரும் பாதை முழுவதும் பிரதமரின் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, சென்னை காவல் துறையுடன் இணைந்து ஒத்திகை நடத்தியுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் பெரியமேடு பகுதி முழுவதும் குறிப்பிட்ட நேரத்திற்கு கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.