சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3ஆம் நாள் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், ”தமிழ்நாட்டுக்கு சிறப்பான பாரம்பரியம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் ஒரு கட்சி, ஒரு அரசு என்பது கிடையாது. சுதந்திரத்துக்குப் பின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைத்து தலைவர்களும் தான் தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணம்” என்று கூறினார்.
தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம்:உடனடியாக குறுக்கிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”ஆண், பெண்ணுக்கு கட்டாயக் கல்வித் திட்டம் என்பன உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி தமிழ்நாட்டின் இன்றைய சிறப்பு நிலைக்கு அடித்தளமிட்டது, நீதிக்கட்சி ஆட்சியில் தான். நீதிக்கட்சி, காங்கிரஸ், திராவிடக் கட்சிகள் தான் தமிழ்நாட்டின் இன்றைய சிறப்பு நிலைக்குக் காரணம்” என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய வானதி சீனிவாசன், நீதிக்கட்சி தொடங்கியதில் அனைவருக்கும் பங்குள்ளது என்பதை தாம் ஒப்புக்கொள்வதாகவும், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் சமூக நீதியைக் காத்ததாகவும் சுட்டிக்காட்டினார். பின்னர், வானதி சீனிவாசன் தமக்குப் பேரவையில் உரிய இடம் ஒதுக்கித்தரப்படவில்லை என்று பேசியதற்கு, சபாநாயகர் அப்பாவு, தனது அறைக்கு வந்து தகவல் கூறினால் உரிய ஏற்பாடு செய்து தரப்படும் என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து மாநிலத்தில் பெண்களின் நிலை பற்றி வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு, பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு ஓட்டுரிமை தந்தது திராவிட இயக்கம் தான் என்றும், அவர்களுக்கு சொத்துரிமை தந்தது கருணாநிதி என்றும் அவை முன்னவர் துரைமுருகன் பதிலளித்தார்.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் - சென்னை மாநகர மேயர்