சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தமிழ்நாட்டில் ஜூலை மாதத்திலிருந்து புதிய பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளன. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைவாகவுள்ளது. சராசரியாக சென்னையில் 10 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை முறையாக செய்யவேண்டும். தொடர்ந்து விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிப்பு முற்றிய பின் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அச்சத்தின் காரணமாக மக்கள் பரிசோதனைகள் செய்யாமல் இருக்கிறார்கள்.
தவறான தகவல்கள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை- ராதாகிருஷ்ணன் தற்போது, கோவை, சேலம், கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. சென்னையில் அம்பத்தூர், அடையாறு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு குறைந்துள்ளது. கரோனா தடுப்பு மருந்தான கோவிஷில்ட் மருந்தின் பரிசோதனை சென்னை அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் நடைபெறும்" என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "17ஆம் தேதி முதல் இ-பாஸ் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்று முதல் 3.25 லட்சம் பேர் மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலத்துக்கு வெளியில் இருந்தும் பயணித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 ஆயிரம் நபர்கள் சென்னைக்கு வருகிறார்கள்.
மாநகராட்சி சார்பில் செய்யப்படும் கண்காணிப்பு பணியின்போது மூச்சுத்திணறல், நாடித்துடிப்பு குறைவாக உள்ளவர்கள் பரிசோதனைக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு நபரை மருத்துவமனையில் சேர்த்தால் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது முன்களப் பணியாளர்களான செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோரை கொச்சைப்படுத்தும் செயல். தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சலைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. வீடு, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:‘கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்’ - அமைச்சர் செல்லூர் ராஜூ!